5 ஆண்டில் இல்லாத அளவுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் சேவை குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டில் இல்லாத அளவுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் சேவை சார்ந்த நிறுவனங்களின் (ஐடி) முதலீடு ரூ. 5 ஆயிரத்து 726 கோடி குறைந்துள்ளதாக அத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தகவல் தொழில்நுட்ப துறை இந்திய
அளவில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. தமிழக அரசின் தமிழ்நாடு மின்னணு
நிறுவனம் (எல்காட்) சென்னையில் சோழிங்கநல்லூர், திருச்சியில் நவல்பட்டு
உள்ளிட்ட 8 இடங்களில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்களை
எல்காட் நிறுவனம் அமைத்துள்ளது.
இதில்
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் (ஐடி) இயங்க தேவையான உட்கட்டமைப்பு
வசதிகள், சாலைகள், சுற்றுப்புற சுவர் ஆகியவற்றை உருவாக்கி அந்த
நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பொருளாதார
மண்டலத்தில் விப்ரோ, எச். சி. எல்., சத்யம், காக்னிசன்ட் உள்ளிட்ட ஐடி
நிறுவனங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழக சட்டபேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கையின்போது தகவல் தொழில்நுட்பத்துறை கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் சேவை சார்ந்த நிறுவனங்களின் (ஐடி) முதலீடு 2018 -19 ஆம் ஆண்டில் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் ரூ. 33627 கோடி முதலீடு மட்டுமே கிடைத்துள்ளது. இந்த தொகை கடந்த 2017 – 18 ஆம் கிடைத்த ரூ. 39353 கோடியை விட ரூ. 5 ஆயிரத்து 726 கோடி குறைவாகும். 2017 – 18 ஆம் ஆண்டு கிடைத்த முதலீடுதான் கடந்த 2014 முதல் கிடைத்த முதலீடுகளில் அதிக அளவாகும். இதில் மிக குறைவாக கடந்த 2014 -15 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட 23071 கோடி மட்டுமே பெறப்பட்டது. அதுமுதல் ஏறுமுகத்தில் இருந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு தற்போது சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீடு குறைந்திருக்கும் அதே வேளையில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும்
ஐடி நிறுவனங்களின் ஏற்றுமதி மற்றும் அந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியில் 2018 -19 ஆம்
ஆண்டில் 120899 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்த தொகையானது கடந்த 2017
-18 ஆம் ஆண்டு கிடைத்த 111485 கோடியை விட 9414 கோடி கூடுதலாகும். கடந்த
2016-17 ஆம் ஆண்டில் 102415 கோடி தகவல் தொழிநுட்ப துறையில் ஏற்றுமதி மூலம்
வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 2014 – 15 ஆம் ஆண்டில் 83326 கோடி வருவாய்
கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பை பொறுத்தவரையில்
661268 பேர் 2018 – 19 ஆண்டில் பயனடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. 2017
– 18 ஆம் ஆண்டுகளில் 632412 பேரும், 2016 -17 ஆம் ஆண்டில் 621149 பேரும்
வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர். 2014 – 15 ஆம் ஆண்டில் 555188 பேர்
வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்தபுள்ளி விவரங்கள் இந்திய மென்பொருள்
தொழில்நுட்ப பூங்கா மற்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் கொடுத்த தகவல்களில்
அடிப்படையில் தரப்பட்டுள்ளது.
2018 -19 ஆம் ஆண்டில் ஐடி நிறுவனங்களின்
முதலீடு குறைந்து இருந்தாலும் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பில் தொடர்ந்து
ஏறுமுகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.